(கவிதை)
By:- Afkar Ahamad
தர்கா நகர்
******************************
படைத்தவனை வைத்து
பகை வளர்த்து
பகையை வைத்து வயிறு வளர்க்கும்
மதவாதிகளின் சமூகத்திற்கு
உயிர்போன உடலை மண் தேட
மண்ணின் தேடல் முடிய முன்னர்
பிணம் வைத்து வாக்குத் தேடும்
அரசியல் வியாதிகளின் சமூகத்திற்கு
முகத்திற்கோர் நிறம்
முதுகிற்கோர் நிறமென
நிறம் மாற்றி ஏமாற்றும்
பச்சோந்திகளின் சமூகத்திற்கு
நிஜமொன்றிருக்க நிழலை காட்டி
ஓரின மக்கள் நெஞ்சில் தீயை மூட்டி
மூட்டிய தீயில் சமயல் நடத்தும்
ஊடகங்களின் சமூகத்திற்கு
முயலாமையை முடியாமை எனக்கொண்டு
உலகுக்கு பயந்து கண்களை மூடி
படைத்தவன் பக்கம் கை காட்டும்
சோம்பேறிகளின் சமூகத்திற்கு
ஆண் செய்யும் தவறை பெண் செய்தல்
பெண்ணியமென நினைத்து
பெண்மையின் புனிதம் அழிக்கும்
பெண்ணியவாதிகளின் சமூகத்திற்கு
தன் கரங்களில் இருக்கும் வாழ்க்கையை
கிரகங்களை வைத்து கணித்து
தாம் கணித்த கணிதம் சரியென நம்பும்
மூடர்களின் சமூகத்திற்கு
படைத்தவன் படைத்த பகுத்தறிவை கொண்டு
அவனது படைப்பிலே ஐயம் கொண்டு
தன் அறிவுக்கு எட்டாதது இல்லையென மறுக்கும்
நாத்திகர்களின் சமூகத்திற்கு
நான் சமூக விரோதி!
Afkar Ahamad
Social Plugin