By:- Ifham Aslam
ஒருநாள் நானும் இறப்பேன்!
என்னையறிந்தோர் கவலைப்படுவர்!
என்னையறியாதோரும் இறந்தது யாரென்று கேட்பர்!
மரணச் செய்தி எங்கும் பறக்கும்!
மஸ்ஜித் ஒலிபெருக்கி முதல் சமூக வலைத்தளங்கள் வரை அறிவிப்புகள் தெறிக்கும்!!
குடும்பத்தினர் கண்ணீர் வடிப்பர்!
நண்பர்கள் சோகத்தில் மிதப்பர்!
சுற்றிப் பெரும் மயான அமைதி நிலவும்!
எதுவும் தெரியாமல் மண்ணறை நினைத்து சடலமாய்க் காத்திருப்பேன்!
சம்பாதித்த செல்வங்கள் என்னுடன் வராது!
பெற்ற பட்டங்கள் தலைமேல் ஏறாது!
வாகனங்கள் வீட்டைத் தாண்டாது!
சொந்த பந்தங்கள் மண்ணறையைத் தாண்டி உள்ளே வராது!
மண்ணறையில் என்னை நோக்கிப் பல கேள்விகள் கேட்கப்படும்!
உலக வாழ்க்கையில் என்ன செய்தாய்?
இறைவன் அளித்த பொக்கிஷமான நேரத்தை எவ்வாறு பயன்படுத்தினாய்?
இறைவன் அளித்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தாய்?
இறைவன் அளித்த கல்வியை எவ்வாறு பிரயோசப்படுத்தினாய்?
பெற்றோருக்குரிய கடமையைச் செய்தாயா?
பெற்ற பிள்ளைகளுக்குரிய கடமைகளைச் செய்தாயா?
சமூகத்திற்குரிய கடமையைச் செய்தாயா?
எனப் பல கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்கும்!
இதில் எத்தனை கேள்விகளுக்கு விடையளிக்கப் போகிறேன் என்பது தெரியாது!
அதில் எத்தனை சரியாக இருக்கும் என்றும் தெரியாது!
கணக்கெடுப்பதில் இறைவனே பெரியவன்!
கேள்வி கேட்பவருக்கு விடை தெரிந்திருப்பதால், பொய் கூறவும் முடியாது!!
இதில் நான் என்பது தான் மாத்திரமல்ல!
எல்லோரும் தான்!
மறுமைக்காக நாம் எவ்வளவு உழைத்துள்ளோம்?!
மரணத்திற்காக எம்மை நாம் தயார்படுத்தியுள்ளோமா?
மரணம் என்பது ஒரு நொடி நிகழ்வு!
அந்நொடி எதுவென்று யாருக்கும் தெரியாமல் இருப்பதே பெரும் சுவாரசியம்!
நேற்று சாதித்த பல சாதனையாளர்கள் இன்று எம்முடன் இல்லை!
இன்று சாதிப்பவர்கள் நாளை உயிருடன் இருப்பார்கள் என்பது நிச்சயமில்லை!
இளவயது மரணங்களைத் தினந்தினம் காண்கிறோம்!
நோய் பீடிக்கப்பட்டு மரணம் தழுவுவோரை அடிக்கடி காண்கிறோம்!
காரணமெதுவும் இன்றி திடீரென மரணித்தவர்களை விட்டு விட்டுக் காண்கிறோம்!
பெரும் மேதைகள் முதல் சாதாரண குடிமகன் வரை தினந்தோறும் மரணித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்!
ஒருவரின் இழப்பின் ரணம் சிறிதுகாலத்தில் மறந்து போய்விடும்!
காலம் சிறந்த மறதி மாத்திரை!
மரணம் நிச்சயிக்கப்பட்டது தான்!
நாம் சுவாசிக்க சுவாசிக்க, எமது மரணத்திற்கான நொடியும் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
நாம் படும் துன்பங்களும் நிரந்தரமல்ல!
ஏன், நாம் அடையும் இன்பங்களும் நிரந்தரமல்ல!
வேதனைகளும் நிரந்தரமல்ல!
சாதனைகளும் நிரந்தரமல்ல!!
இவ்வுலக வாழ்க்கையே நிரந்தரமல்ல!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திலேயே இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த நோக்கத்தை ஆராய்ந்து அறிவதுடன்,
அனுதினமும் படைத்த இறைவனை ஞாபகப்படுத்த வேண்டும்!
இறைவன் சோதிப்பதில் ஆர்வம் மிக்கவன்!
செல்வம், பட்டம், பதவி, கல்வி, நோய், ஆரோக்கியம், இயலாமை, பிள்ளைகள் எனப் பலவடிவங்களில் சோதிப்பான்!
சாதனைகளின் போது "தான்" என்ற தற்பெருமை கொள்ளக் கூடாது!
வேதனைகளின் போது இறைநம்பிக்கையை இழக்கக் கூடாது!
இவ்வுலகைப் படைத்த இறைவன், அதில் சிறிது காலம் தங்கிச் செல்லவே மனிதர்களைப் படைத்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்!
இருக்கும் காலத்தில் பிறருக்கு நன்மையே நாடி, மறுமை வாழ்வுக்காக எம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்!
நேற்று ஒருவர் மரணித்தார்...
இன்று இன்னொருவர்.......
நாளை??????
நானோ, இல்லை நீங்களோ, இல்லை எம்மைச் சார்ந்த ஒருவரோ!
இறைவன் அறிவான்!!
Ifham Aslam
Visiting Lecturer (OUSL)
BSc, MSc (R)
Social Plugin