(கவிதை)
by: இஸ்ஸத் இஷாரா



இந்த ஜனனங்கள் ஒவ்வொன்றும்
என்றோ ஓர்நாள் மண்ணோடு
மறைந்தே போகும் என்று
உணர்ந்து கொள்ளும் வரை தான் இந்த 
போராட்டங்களும் கண்ணீரும்

ஆயிரம் சொந்தங்கள் இருந்தும்
தேவையொன்று இருந்தால் 
எல்லா உறவுகளும் 
செல்லாக்கசாகி போவதும், 
ஏளனமாய் சிரிப்பதும் வாழ்நாளின் நிதர்சனமே

இன்னொருவன் கொஞ்சம் சிரித்திட
அவன் பட்ட பாடெல்லாம் அறிந்தும்
ஆயிரம் கதை பேச மட்டும் 
ஊரெல்லாம் உறவாகிப்போவதும்
நாம் கண்ட நியதியே

பல்லாயிரம் முறை முயற்சித்தும்
தோற்றுப்போனவன் துவண்டு போய் 
இதுவே விதியென வீதியோரம் நிற்க 
விளையாட்டாய் வெளிநாடு போனவன் 
காரில் செல்கிறான்...

ஒவ்வொருவரின் பார்வையிலும்
ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கும்
பார்வைகள் ஒன்றாய் இருந்தாலும்
பார்க்கும் மனிதர்கள் பலவிதமல்லவோ 

யாரோ ஒருவர் பார்வையில் நாமும் தீயவரே....!!!



:-இஸ்ஸத் இஷாரா